

இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டு தினம். இதை உகாதி அல்லது யுகாதி என்று அழைப்பார்கள். மகராஷ்டிர மக்கள் இத்தினத்தை குடிபாட் என்று கொண்டாடுகிறார்கள். சிந்தியினத்தவர் சேதிசந்த் என்றும் கொண்டாடுவார்கள். தெலுங்கு இனத்தவர்கள் விசேஷமாக கொண்டாடும் புத்தாண்டு தினமான இன்று சம்ஹத்தர கெளரிவிரதத்தையும் கடைப் பிடிப்பார்கள்.
யுகம் என்னும் ஆண்டு ஆதியில் இருந்து தொடங்குகிறது என்பதே யுகாதி எனப்படுகிறது. சைத்ர மாதத்தின் முதல்நாளே பிரம்மன் உலகத்தைப் படைத் ததாக புராணங்கள் கூறுகிறது. பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் அமாவாசை ஒரு நாழிகையும் இல்லாமல் இருக்கும் காலமான பிரதமை திதியில் தான் யுகாதி தினம் கொண்டாடவேண்டும்.
தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படும் இன்றைய தினத்தின் கிரகமே இந்த வருடத்தின் அதிபதியாக வணங்கப்படுவார். இந்துக்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடும் சித்திரை முதல் தேதி தினத்தின் கிரகமானவர் வருடத்தின் மந்திரியாக வணங்கப்படுவார்.
இன்றைய யுகாதி தினமானது உலகத்தில் நடக்கக் கூடியவைகளை முன்கூட்டியே காண்பிக்கும் காலக்கண்ணாடியாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகிறார்கள். காரணம் திதி, வாரம், நட்சத்திரம், கராணம், யோகம் போன்ற ஐந்துவிதமான அங்கங்களை கொண்டு சர்வ மங்கள பஞ்சாங்கமாக மலர்கிறது.
இன்று அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை உடுத்தி வீட்டை அலங்கரிக்க வேண்டும். கெளரியை நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டு பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து வணங்க வேண்டும். நைவேதய்மாக யுகாதி பச்சடி என்னும் சத்ருஜி பச்சடி செய்வது விசேஷம். சத் என்றால் ஏழு என்ற பொருள். இந்தப் பச்சடியில் உப்பு (உவர்ப்பு),மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) வேப்பம் பூ (கசப்பு) வெல்லம் (இனிப்பு),புளி (புளிப்பு) வரமிளகாய் (கார்ப்பு) போன்றவை சேர்த்து செய்யப்படும்.
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்.. அனைத்தையும் சமமாகவே பாவிக்கவேண்டும் என்பதை உணர்த்தவே இந்தப் பச்சடி செய்யப்படுகிறது.
பூஜை முடிந்ததும் பஞ்சாங்க படனம் என்னும் நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் யுகாதியை வரவேற்று ஒவ்வொரு மாதத்தின் பலனையும் படிப்பார்கள். வரும் ஆண்டில் இயற்கை வளம், மழை,அரசாங்கத்தின் நிலைப்பாடு, நட்சத்திரங்களின் பலன்கள், நவக்கிரகங்களின் பொறுப்புகள், இடமாற்றங்கள், இயற்கை மாற்றங்கள், கால நேரங்கள் போன்றவற்றை இந்தப் பஞ்சங்கத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
யுகாதி அன்று செய்யப்படும் புதிய முயற்சிகள் தடையில்லாமல் வெற்றி பெற வழிகாட்டும்.
கெளரி தேவி விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் பருப்புகள் சேர்த்து ஒப்பட்டு செய் வார்கள். யுகாதி ஸ்பெஷலான இந்த ஒப்பட்டு பழக்கம் தற்போது மறைந்து வந்தாலும் யுகாதி அன்று செய்யப்படும் பச்சடியை சித்திரை முதல் நாளிலும் இந்துக்கள் செய்கிறார்கள்.
யுகாதி வழிபாடு முறை....
காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது.
இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம்.
ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம்.
யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள்,புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
வசந்த காலத்துக்கு வரவேற்பு விழாவாக திகழும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 06.04.2019 வியாழக்கிழமை காலை 10.00மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏழு விதமான பொருட்களை கொண்டு தயாரித்த யுகாதி பச்சடியை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நிவேதனம் செய்து, முக்குடி கஷாயத்துடன் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025