

ஆஷாட நவராத்திரியில் அன்னை வாராஹிக்கு
1000 தாமரை மலர்கள், 1000 தீபங்கள் கொண்டு சிறப்பு வழிபாடு வருகிற 09.07.2021 முதல் 19.07.2021 வரை நடைபெறுகிறது
1000 கிலோ குங்குமத்தால் பஞ்சமுக வாராஹிக்கு அபிஷேகம் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 10.07.2021, சனிக்கிழமை முதல் 19.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை ஆஷாட நவராத்திரி வைபவம் வாராஹி சந்நதியில் 1000 தீபங்கள் ஏற்றி 1000 தாமரை மலர்களைக் கொண்டு ஹோமங்களும், பூஜைகளும் காலை, மாலை இருவேளையும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ சாக்த வழிபாடு அம்பிகையை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவதாகும். ஆதி அன்னையே சகல சக்தியாகவும் திகழ்ந்து சகல உலகங்களையும் காப்பவள். தேவி வழிபாடுகளில் நவராத்திரி மிகவும் முக்கியமானது. பொதுவாக நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் ஆயுதபூஜைக் காலமான மகாநவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர் கொண்டிருந்தனர். காலப் போக்கில் அந்த வழக்கம் குறைந்து முக்கியமான நான்கு நவராத்திரிகளைக் கொண்டாடும் வழக்கமே உள்ளது.
நான்கு நவராத்திரிகள்
ஆனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் “ஆஷாட நவராத்திரி” என்றும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் “சாரதா நவராத்திரி” என்றும் தை மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் “சியாமளா நவராத்திரி” எனும் “மகா நவராத்திரி” என்றும் பங்குனி மாதம் அமாவாசைக்கு பின் வரும் 9 நாட்கள் `வசந்த நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
வாராஹியின் சிறப்புகள்
வாராகியின் இருசெவிகள் கோமளமாகவும் திருவடிகள் புஷ்பராகமாகவும் இரண்டு கண்கள் நீல கல்லாகவும், கரங்கள் கோமேதகமாகவும், நகம் வைரமாகவும், சிரிப்பு முத்து ஆகவும், பவளம் இதழாகவும், திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போன்றதாகவும் போற்றப்படுகிறது. வாராஹி வாலை திரிபுர சுந்தரியாக இருந்து நமக்கு அட்டமா சித்திகளை வழங்குகிறாள். வாராஹி தீயவைகளையும், எதிரிகளின் தொல்லைகளையும், துன்புறுத்தல்களும் அழித்து நம்மை காப்பவள். பக்தரைக் காக்கும் பேரரணாக இருப்பவள் வாராஹி. மனதில் ஏற்படும் பயத்தை போக்குபவளும், பகைமை நீக்குபவளும் வாராஹி. நோய்களை தீர்த்து உடல்நலத்தை தருபவள் வாராஹி.
வார்த்தாளி – வாராஹி – ஆஷாட நவராத்திரி
ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் ஆஷாட நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வார்த்தாளி என்கிற வாராஹி அம்மன் ஆகும்.
வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே ஆனி - ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி அம்மன். அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் அதனால்தான் தன்வந்திரி பீடத்தில் விவசாய பெருமக்களுக்காகவும், உழவுதொழிலை மேம்படுத்தவும், இயற்கை வளங்கள் சுபிச்சைமாக இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பஞ்சமுக (காளி, வாராஹி, சூலினி, திரிபுர பைரவி, பகளாமுகி) வாராஹிக்கு ஆலயம் அமைத்து அவ்வப்பொழுது வாராஹி ஹோமங்களும், சக்தி ஹோமங்களும் பஞ்சமி மற்றும் அஷ்டமி நாட்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று வருகிறது. இங்கு பிரதி பஞ்சமி நாட்களிலும் ஆஷாட நவராத்திரி தினங்களிலும் வாராஹிக்கு சிறப்பு பூஜைகள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
பஞ்சம் போக்கும் பஞ்சமி
ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ’ என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள் கொள்ளலாம். தானியங்கள் கொண்டு அன்னை வாராஹியை வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
பயங்களைப் போக்கி வெற்றியைத் தருபவள் வாராஹி
`சதுரங்க சேனா நாயிகா’ என்றொரு திருநாமம் அன்னைக்கு உண்டு. அதாவது லலிதாம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்பது இதன் பொருள். எனவே அன்னையை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் பயங்களும் பிரச்னைகளும் இல்லாமல் போகும். `வாராஹிகாரனிடம் வாதாடாதே’ என்று ஒரு சொல்லாடலே முன்பு இருந்தது. காரணம் வாராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
பஞ்சமி அன்று வாராஹி நாமத்தை சொல்லி பிரார்த்தனை செய்து வந்தால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
ஸ்ரீ வராஹி தேவிக்கு பிரியமான பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர் சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் கலந்த சாதங்கள் தன்வந்திரி பீடத்தில் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
பிலவ ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி 10.07.2021, சனிக்கிழமை அன்று தொடங்கி 18.07.2021, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. 14.7.2021 அன்று பஞ்சமி திதி முன்னிட்டு அன்னை வாராஹிக்கு 1000 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இந்நாளில் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னை வாராஹி தேவியை வழிபட்டு. நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி செல்வ வளங்களுடன் இன்பங்கள் பெற பிரார்த்திப்போம் பஞ்சமுக வாராஹியை என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
வார்த்தாளி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவி களில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரியா சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.
வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.
ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
முதலாம் நாள் இந்திரா தேவி (இந்திரானி), இரண்டாம் நாள் ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி), மூன்றாம் நாள் விஷ்ணு தேவி (வைஷ்ணவி), நான்காம் நாள் சிவ தேவி (மகேஸ்வரி), ஐந்தாம் நாள் குமார தேவி (கௌமாரி), ஆறாம் நாள் ருத்ர தேவி (காளி சாமுண்டா), ஏழாம் நாள் சாகம்பரி தேவி, எட்டாம் நாள் வராஹி தேவி, ஒன்பதாம் நாள் லலிதா பரமேஸ்வரி அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் வாராஹி ஹோமம், வாராஹி அபிஷேகம் பல்வேறு மலர்களால் பூஷ்பாஞ்சலி எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற உள்ளது. ஆஷாட நவராத்திரியில் அன்னை பராசக்தியை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025